கொச்சி: தனிமையில் ஒரு நபர் ஆபாசப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்ப்பதில் தவறு இல்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அது அவரின் தனிப்பட்ட விருப்பமாகவே கருதப்படும் நிலையில், அதை குற்றச் செயலாக கருத முடியாது எனவும் ஒருவரின் தனிமனித உரிமையில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து தனது மொபைல் ஃபோனில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292-வது பிரிவின் கீழ் ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீது பதியப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை மற்றும் மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹி கிருஷ்ணன் தலைமையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, பேசிய நீதிபதி ஆபாசப்படங்கள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும், இந்த டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் கூட அதை எளிதில் அணுகும் வகையில் காலம் மாறி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் ஒரு நபர் தனது தனிப்பட்ட நேரத்தில் மற்றவர்கள் பார்க்கும்படி இல்லாமல் தனிமையில் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமா என்ற கேள்விக்கு பதில் காண வேண்டிய கட்டாயம் உள்ளது எனக்கூறிய நீதிபதி, அதை குற்றம் என நீதிமன்றத்தால் அறிவிக்க முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ஆபாசப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்த நீதிபதி, இந்தியச் சட்டம் 292-வது பிரிவின் கீழ் அது குற்றம் ஆகாது எனவும் கூறியுள்ளார். அதே நேரம் அவர், அந்த ஆபாச வீடியோவை பகிரங்கமாக காட்சிப்படுத்தி, மற்றவர்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் செய்திருந்தால் அது குற்றம் எனவும் அதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி கூறினார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்த நீதிபதி, பி.வி.குன்ஹி கிருஷ்ணன், இணைய வசதியுடன் கூடிய மொபைல் ஃபோன்களை பெற்றோர் குழந்தைகளுக்கு தனிமையில் பயன்படுத்த வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், அவர்களின் குறும்பு தனத்தை அமைதி கொள்ள செய்யவும் வேண்டி பெற்றோர் குழந்தைகளிடம் மொபைல் ஃபோன்கள் கொடுப்பதை பார்க்க முடிகிறது. இதை பெற்றோர் முற்றிலும் தவிற்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், குழந்தைகளுக்கு swiggy, zomato-வில் உணவுகளை ஆர்டர் செய்து மொபைல் ஃபோனையும் கையில் கொடுத்து ஆதரிக்கும் பெற்றோரை பார்கையில் வேதனையாக உள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, குழந்தைகளை விளையாட்டு மைதானங்களில் சென்று, உடலுக்கு வேலை கொடுத்து விளையாட அனுமதியுள்ளங்கள் எனவும், அம்மாவின் கை வாசத்தில் உணவை சமைத்துக் கொடுத்து குழந்தைகளை உங்கள் வசம் வையுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் எதிர்காலத்தின் கலங்கரை விளக்கங்கள், அவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை இந்த காலத்தில் உள்ள பெற்றோரிடமே ஒப்படைக்கிறேன் எனவும் நீதிபதி பி.வி.குன்ஹி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எருமை திருட்டு வழக்கில் 58 ஆண்டுகளுக்கு பிறகு கைதான நபர்.. நடந்தது என்ன?