மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தஹிசார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்தபோது முதியவர் ஒருவரின் காலணி கழன்று விழுந்தது. இதனையடுத்து, காலணியை மீண்டும் அணிந்துகொண்டு நடைமேடைக்கு வருவதற்குள் ரயில் மிக அருகில் வந்துவிட்டது.
இதனால், பதற்றம் அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முதியவர், ஒரு வழியாக நடைமேடையில் ஏற முயற்சித்தார். ஆனால் நடைமேடை சற்று உயரமாக இருந்ததால், அவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர், முதியவர் நடைமேடை மீது ஏற முயற்சிப்பதைக் கண்டு, விரைந்துவந்து அவருக்கு கைக்கொடுத்து நடைமேடையில் இழுத்துப் போட்டார்.
காவலரின் இந்தத் துரித நடவடிக்கையில் முதியவர் ரயில் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இந்தக் காட்சி ரயில் நிலையித்தில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகிவருகிறது
துரிதமாகச் செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய காவலருக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.