ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் சித்திபேட் ஹோகேடா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தோட்டத்தில் உள்ள பயிர்களை பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கரடி வேடம் அணிந்துள்ளார். அவர் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
பஞ்சம், பசி,பட்டினி என்று எது வந்தாலும் உழவையும் உழைப்பையும் நிறுத்தாத ஜீவன்கள் தான் விவசாயிகள். ஒரு வருடம் மழை பெய்யாமல் வறட்சியால் வறுமை வரும். ஒரு வருடம் மழை பெய்து வெள்ளத்தால் அழிவு வரும். இந்த இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியில் தாங்கள் விளைவித்த விவசாய பொருள்களை சந்தைப்படுத்த விவசாயிகள் படும்பாடு எழுத்துக்குள் அடங்காது.
இந்த நிலையில் சில நேரங்களில் காட்டு விலங்குகளும் விவசாயிகளுக்கு தொல்லைக் கொடுப்பது உண்டு. இந்த விலங்குகளை விரட்ட விவசாயிகள் தோட்டத்தில் மணி அடித்தல், இரவு-பகல் பாராது காவல் காத்தல் என கண்ணுக்கு இமை போல் பயிர்களுக்கு அரணாக நிற்பார்கள். இதை மெய்ப்பிக்கும் விதமாக சம்பவம் ஒன்று தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
விவசாயியான பாஸ்கர் ரெட்டி, தன் தோட்டத்தில் உள்ள பயிர்களை பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற கரடி அரிதாரம் பூசியுள்ளார். அவர் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. இதற்கிடையில், காட்டு விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காக்க இந்தக் கரடி வேடமிட்டதாக விவசாயி பாஸ்கர் ரெட்டி கூறினார்.
இதற்கு மத்தியில் தெலங்கானாவில் கரடி, புலி மற்றும் குரங்கு உள்ளிட்ட வேடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் காட்டு விலங்குகள், காக்கை உள்ளிட்ட பறவைகளின் தொந்தரவு அதிகம் இருப்பதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரடி, புலி மற்றும் குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் வேடமிட்ட மனிதர்களை பணிக்கு நியமிக்கின்றனர்.
இதற்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக விவசாயி ஒருவர் தோட்டத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புலி பொம்மை ஒன்றை வயலில் வைத்துள்ளார். உண்மையான புலி உறங்குவதாக நினைத்து மற்ற காட்டு விலங்குகள் புலி அருகில் வர அஞ்சியுள்ளன. அதன்பின்னர் இந்தப் பகுதிகளில் புலி, குரங்கு மற்றும் கரடி வேடங்கள் புகழ்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : பாகனை தூக்கி வீசிய யானை!