கர்நாடகா: கர்நாடகாவின் விஜயாபுரா தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால், முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்., எடியூரப்பா அமைச்சரவையில், அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய யத்னால், "டெல்லியிலிருந்து வந்த சிலர், தான் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுத்தால், தன்னை முதலமைச்சர் ஆக்குவதாக பேரம் பேசுகிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசியலில் பதவி வாங்கித் தருவதாகக்கூறி பணம் பறிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். சீட்டு வாங்கித் தருவதாகக்கூறி டெல்லிக்கு அழைத்துச் சென்று, சோனியா காந்தியையும், நட்டாவையும் சந்திக்கும் வாய்ப்பை வாங்கித் தருவார்கள் என்று விமர்சித்தார்.
அந்தக் கட்சிக்கு செல்லாதீர்கள், இங்கு செல்லாதீர்கள் எனக்கூறி அரசியல் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்". யத்னாலின் இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார், பாஜக மூத்தத் தலைவரான யத்னாலின் இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் கவனத்தில் கொள்ளக்கூடியது என்றும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:’அறிவியல் பொய் சொல்லாது.., ஆனால் மோடி சொல்லுவார்..!’ - ராகுல் காந்தி