பாட்னா(பீகார்): நிதிஷ் குமார் அரசு ‘சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்’ (அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்) திட்டத்தின் 'பெண்களின் மதிப்பை உயர்த்துவதை நோக்கி'. என்ற கருத்தரங்கிற்கு யுனிசெஃப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து கடந்த செவ்வாய் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஹர்ஜோத் கவுர் பாம்ரா, மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்த கருத்தரங்கில் பள்ளி மாணவி ஒருவர் அரசு மலிவு விலையில் 20 முதல் 30 ரூபாய்க்கு சானிட்டரி பேட்களை வழங்க முடியுமா என்று கேட்டார். மாணவியின் கேள்விக்கு பாம்ரா, அளித்த பதில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மாணவியின் கேள்விக்கு “இந்த கோரிக்கைகளுக்கு வரம்பு இருக்கிறதா, 20-30 ரூபாய்க்கு விஸ்பர் கொடுக்க வேண்டும், நாளை ஜீன்ஸ் மற்றும் அழகான காலணிகளைக் கேட்பீர்கள், கடைசியாக, குடும்பக் கட்டுப்பாடு என்று வரும்போது, ஆணுறைகளும் இலவசமாக வழங்க வேண்டும் என்று கேட்பீர்கள்" என்று பாம்ரா, பதிலளித்தார்.
மக்களின் வாக்குகள் அரசாங்கத்தை உருவாக்குகின்றன என்று மாணவி கூறியபோது, அந்த அதிகாரி, "இது முட்டாள்தனத்தின் உச்சம். ஓட்டு போடாமல் இருங்கள், பாகிஸ்தான் போல ஆகுங்கள். பணத்திற்காகவும் சேவைக்காகவும் வாக்களிக்கிறீர்களா?" என்று பதில் கொடுத்தார்.
ஆனால், பின்னர் நடந்த உரையாடலில், எல்லாவற்றுக்கும் அரசை நம்பி இருக்கக் கூடாது என்பதை மாணவிக்கு புரிய வைக்க முயன்றார் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாம்ரா.
இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்