டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல், ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இந்த நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளரான ஜெகதீப் தன்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பசுபதி குமார் பராஸ், அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தன்கர், "நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பாடுபடுவேன். என்னைப் போன்ற எளிய பின்னணி கொண்ட ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை.
என்னைப் போன்ற சாதாரண விவசாய குடும்பத்தைச்சேர்ந்த ஒரு எளிய மனிதருக்கு, இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமைக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்," என்று கூறினார்.
இதையும் படிங்க: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!