டெல்லி: ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா பிரிக்கப்பட்டது. இதையடுத்து தெலங்கானா தலைநகராக ஹைதராபாத் மாறியது. இதையடுத்து குண்டூர் - விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள அமராவதியை ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகராக அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு அப்போது அறிவித்தார்.
அவரைத்தொடர்ந்து முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்திற்கு அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய 3 தலைநகர்களை அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இது தொடர்பான பொது நல வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அமராவதியை தலைநகராக அறிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடந்த ஆந்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”உங்களை விசாகப்பட்டினத்திற்கு அழைக்கவே இங்கு வந்தேன். ஆந்திர மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் மாறப்போகிறது. நானும் விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயர உள்ளேன். ஆந்திரப் பிரதேசத்தில் தொழில் செய்வது எளிதானது என்பதைக் காண உங்களுக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.
பொதுவாக, ஒரு மாநிலத்தின் தலைநகராக கடற்கரையோர நகரம் இருக்கும்போது, அம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதற்கு உதாரணங்களாக மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்கள் விளங்கி வருகின்றன. அதனாலேயே ஆந்திராவின் விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த முடிவுக்கு அமராவதி நகரை தலைநகராக மாற்ற நிலங்கள் வழங்கிய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிகரெட் கடன் தர மறுத்ததால் கோபம்.. கடை உரிமையாளரின் கண்ணை நோண்டிய கொடூரம்!