இம்பால் (மணிப்பூர்): மணிப்பூர் வன்முறையில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லும் வீடியோ கடந்த வாரம் வலைதளங்களில் பரவி சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அந்த விவகாரத்தில் 2 பெண்களும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோவில் உள்ள 14 பேரை அடையாளம் கண்டு உள்ளதாக மணிப்பூர் காவல்துறை கூறியது. மேலும் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றதாகவும், அதன் பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் வீடியோவில் அடையாளம் காணப்பட்ட 14 பேரில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். திங்கள்கிழமை (ஜூலை 24) மாலை, தௌபால் மாவட்டத்தில், மணிப்பூர் போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை ட்விட்டரில், வைரலான மே 4, 2023 அன்றைய இரண்டு பெண்களின் வீடியோ தொடர்பான வழக்கில் இதுவரை மொத்தம் ஒரு சிறுவன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சந்தேகத்திற்குரிய பல மறைவிடங்களில் சோதனை நடத்தி மீதமுள்ள நபர்களை கைது செய்ய நாங்கள் முழு முயற்சி எடுத்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.
மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 125 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு உள்ளன. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 396 பேரை போலீஸார் பிடித்து வைத்து உள்ளனர். வன்முறை நடைபெறக் கூடிய அனைத்து இடங்களிலும் நாங்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் வாகன போக்குவரத்து பாதுகாப்பாக இயங்குவதற்காக முக்கியமான இடங்களில் பாதுகாப்பு கான்வாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து உள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், அசாம் படைப்பிரிவில் சுபேதாராக பணியாற்றி கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மே 4-இல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது வலைதளங்களில் சமீபத்தில் பரவிய நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய ஆந்திர முதலமைச்சர் - குறுகிய தொலைவுக்கு ஹெலிகாப்டர் பயணமா?