ஷிவமோகா: கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கடந்த 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லிங்கனமக்கி நீர் மின் உற்பத்தி திட்டத்திற்காக, ஷெட்டிஹள்ளி, சித்ருஷெட்டிஹள்ளி ஆகிய கிராமங்களை அரசு காலி செய்தது. அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு, ஷெட்டிஹள்ளி சரணாலய பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால், பல ஆண்டுகளாக சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியே அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மின்கம்பங்களால் சரணாயத்தில் உள்ள வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நிலத்துக்கு அடியில் புதைவட மின்கம்பிகள் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஷெட்டிஹள்ளி சரணாலய பகுதிக்கு மின்வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3.60 கோடி ரூபாய் செலவில் புதைவட மின்கம்பிகள் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்திற்கு இன்று(டிச.11) அடிக்கல் நாட்டப்பட்டது.
கர்நாடக மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக தங்களது சொந்த கிராமத்தையும் வீடுகளையும் இழந்து இருளில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மின் வசதி கிடைக்கவுள்ளது.
இதையும் படிங்க:டெல்லி மதுபான வழக்கு: தெலங்கானா முதலமைச்சரின் மகளிடம் சிபிஐ விசாரணை