சென்னை: ஜெர்மனியின் பேட் விஸ்செனன் நகரில் 24வது நார்டு வெஸ்ட் 2023 செஸ் சாம்பியன் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டிக்கு இந்திய தரப்பில், தமிழ்நாட்டை சேர்ந்த என்.ஆர்.விக்னேஷ் முன்னேறினார். அவர் ஜெர்மனி வீரர் லிஜா ஸ்னெடைரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், லிஜாவை வீழ்த்தி, விக்னேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அவரது ரேட்டிங் 2,500 புள்ளிகளை கடந்ததால், இந்தியாவின் 80வது கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றார். விக்னேஷின் இளைய சகோதரர் விசாக்கும் செஸ் விளையாட்டு வீரர்தான். அவர் 2019ம் ஆண்டே நாட்டின் 59வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுவிட்டார். நாட்டிலேயே சகோதரர்கள் இருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறை.
இதுகுறித்து விக்னேஷின் சகோதரர் விசாக் கூறுகையில், "எனது சகோதரர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இன்னும் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடி சாதனை படைக்க விரும்புகிறோம்". என்றார்.
அண்மையில் தேசிய அளவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், விக்னேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவை பொறுத்தவரை முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றினார். இதுவரை கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை கைப்பற்றிய இந்தியாவை சேர்ந்த 80 பேர்களில், 28 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: அதை ஏண்டா தொட்ட! விமானத்தின் எமர்ஜென்சி கதவை தொட்ட பொறியியல் மாணவர் மீது வழக்கு!