சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது.
இதையறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகள் 8 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நேற்றிரவு(செப்.17) விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விடுதியில் இருந்த மாணவி ஒருவர்தான், மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாணவிகள் குளிப்பதை வீடியோவாக எடுத்து, அதை அவரது ஆண் நண்பனுக்கு அனுப்பியுள்ளார் என்றும், அந்த வீடியோக்களை விற்று பணம் சம்பாதித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
60-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு வீடியோ மட்டுமே வெளியானதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு