கர்கோன்: மத்தியப்பிரதேச மாநிலம், கர்கோன் அருகே உள்ள உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து சோயா பொட்டலங்களை திருடியதாகக்கூறி, 32 வயதான இளைஞர் ஒருவரை அப்பகுதியினைச்சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மனிதாபிமானமின்றி தாக்கியதோடு, அவர் இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பதை உறுதி செய்ய அவரது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி அவமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட இளைஞரைக் கைது செய்தனர்.
அந்த இளைஞர் பட்டியலின சமூகத்தைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி நடந்த இந்தச்சம்பவம் கர்கோன் மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரை கைது செய்த கல்தாங்கா காவலரை பணியிடை நீக்கம் செய்து கர்கோன் காவல்துறை கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவரை சிறையில் அடைத்தது தொடர்பாக பதிலளிக்க, கல்தாங்கா காவல் நிலையப்பொறுப்பாளர் ராஜேந்திர சிங் பாகேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச்சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது