பெங்களூர்: ஆட்டோமொபைல் துறையில் முன்னணி தொழிலதிபர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கர் (64) மாரடைப்பால் காலமானார். இவர் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார். இவருக்கு கீதாஞ்சலி கிர்லோஸ்கர் என்ற மனைவியும், மான்சி கிர்லோஸ்கர் என்ற மகளும் உள்ளனர்.
விக்ரம் கிர்லோஸ்கரின் மரணம் குறித்து டொயோட்டா இந்தியா, செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நவம்பர் 29, 2022 அன்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கரின் அகால மறைவு குறித்து உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த வருத்தமடைகிறோம். இந்த சோகமான நேரத்தில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விக்ரம் கிர்லோஸ்கரின் உடல் நவம்பர் 30, 2022 அன்று மதியம் 1 மணிக்கு பெங்களூரில் உள்ள ஹெப்பல் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும். இந்தியாவில் டொயோட்டா கார்களை பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. அவரது திறமையான தலைமைத்துவத்தால், அவர் டொயோட்டாவை வெவ்வேறு உயரங்களுக்கு கொண்டு சென்றார்.
விக்ரம் கிர்லோஸ்கர் எம்ஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். விக்ரம் கிர்லோஸ்கர், கிர்லோஸ்கர் குழுமத்தின் நான்காவது தலைமுறை தலைவராக இருந்தார். கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடைபயிற்சி சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்த கோயில் யானை... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி