காந்திநகர்: செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா–ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வேதாந்தா–ஃபாக்ஸ்கான் குழுமம் மற்றும் குஜராத் அரசு இடையேயான ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் செமிகண்டக்டர் தொடர்புடைய துணைத் தொழில்கள் அதிகமாக உருவாவதோடு, எம்எஸ்எம்இ-க்களுக்கும் இந்த ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் உற்பத்தி நோக்கத்தை விரைவுபடுத்துவதில் முக்கியமான ஒன்றாகும். ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது பல்லாயிரம் வேலை வாய்ப்புகளையும், நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்க முக்கிய பங்காக அமையும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ரூ.1,54,000 கோடி முதலீட்டில், ரூ.94,000 கோடி தொடுதிரை உற்பத்திக்கான ஆலைக்கும், ரூ.60,000 கோடி செமிகண்டக்டர் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய மின்னணு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,00,000 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
இதன் மூலம் எலக்ட்ரானிக் துறையில் மட்டும் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளை 1 கோடியாக உயர்த்தவும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ரூ. 25,00,000 கோடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு முயற்சித்துவருவதா மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்ப்பு