டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன், ஹரித்வார் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு
கனமழை காரணமாக, கங்கோலிஹாட் சுங்கி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தபீடர் சிங் (65) என்பவர் பலத்தக்காயம் அடைந்தார்.
வயிறு, தலை ஆகிய பகுதிகளில் காயமுற்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இதைப் போலவே, காய்கறி லோடு ஏற்ற சென்ற கலீல் அகமது (55), காட் பாலம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மீட்பு பணி
கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராம்கங்கா, விக்டோரியா உள்ளிட்ட முக்கிய அணைகள் முழுவதுமாக நிரம்பியதால், நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஹரித்வாரின் ரிஷ்கேஷில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணரின் அவதாரமான மரங்கள்? கிராம மக்களின் விநோத நம்பிக்கை!