உத்தரகாண்டில் முக்கிய அரசியல் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை இன்று (மார்ச் 9) ராஜினாமா செய்துள்ளார். ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களுக்கு திரிவேந்திர சிங் மீது அதிருப்தி ஏற்பட்டதன் விளைவாக இம்முடிவை அவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த திரிவேந்திர சிங், மக்களுக்குப் பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பாஜகவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
நான்காண்டு காலம் முதலமைச்சராகப் பணியாற்ற தனக்கு கிடைத்த நிலையில், தற்போது வேறொரு நபருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக நேற்று டெல்லியில் கட்சி மேலிடத்தைச் சந்தித்தார் திரிவேந்திர சிங். அதன் பின்னணியில் அவர் இந்தத் திடீர் முடிவெடுத்துள்ளது, முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
நாளை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் தன் சிங் ராவத் அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ராகுலை மீண்டும் தலைவராக்க இளைஞர் காங்கிரஸ் தீர்மானம்