டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானியில் இன்று(டிசம்பர் 3) ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்பாக மணப்பெண் வீட்டார் தங்களது வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், ரூ.50,000 பணத்தையும் ஒரே பையில் வைத்து ஆட்டோவில் எடுத்து சென்றுள்ளனர். இந்த பையை திருமண மண்டபம் வந்த உடன் அவசரத்தில் ஆட்டோவிலேயே விட்டு சென்றனர். இதன்பின் ஆட்டோவும் அங்கிருந்து சென்றுவிட்டது.
இதையடுத்து மணப்பெண்ணுக்கு அணிவிக்க தங்க நகைகளை தேடியபோதே பையை தவறவிட்டது தெரியவந்தது. இந்த விஷயம் திருமண மண்டபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் கிர்த்தி பல்லப் ஜோஷி என்பவர் கையில் நகைப்பையுடன் மண்டபத்துக்குள் நுழைந்து, ஆட்டோவில் இந்த பை கிடந்தது.
உரிமையாளர் யார் என்று சொல்லுங்கள், அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைகேட்ட மணப்பெண் வீட்டார் ஆனந்த கண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதையடுத்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநருக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இருப்பினும் அவர் வெகுமதியாக எதையும் வாங்கிக்கொள்ளாமல், மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
இதையும் படிங்க: ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்... பேரனை கைது செய்த போலீசார்... தாத்தா அதிர்ச்சி...