பாக்பத் (உத்தரப் பிரதேசம்): காய்கறிகள் மற்றும் பொருட்களின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தக்காளி விலையும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மக்களைக் கவரும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மொபைல் போன் விற்பனையாளர், ஒரு தனித்துவமான சலுகையை அறிவித்து உள்ளார்.
இவரது கடையில் மொபைல்போன் வாங்குபவர்களுக்கு, ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, வாடிக்கையாளர்களை, இவரது கடையை நோக்கிப்படை எடுக்க வைத்து உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் பகுதியில் உபேந்திர குமார் என்பவர், மொபைல் போன் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக, மக்களிடம் வாங்கும் திறன் குறைந்ததால், இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பெருமளவில் குறைந்தது.
இதனையடுத்து, உபேந்திர குமார் ஒரு தனித்துவமான சலுகையை அறிவித்தார். அதாவது, ஒரு மொபைல் போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் பயனை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். தக்காளியின் விலை கணிசமான அளவிற்கு அதிகரித்து உள்ள நிலையில், பாமர மக்களின் நலன் கருதி, இந்த சலுகையை அறிவித்ததாக, தெரிவித்த உபேந்திர குமார், மக்கள், இந்த வாய்ப்பை, நல்ல முறையில் பயன்படுத்திவருவதாக தெரிவித்து உள்ளார்.
புதிய மொபைல் போன் உடன், ஒரு கிலோ தக்காளியையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பினால், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்ற யோசனையில் உதித்ததே, இந்த அறிவிப்பு என்று, உபேந்திர குமார் குறிப்பிட்டு உள்ளார். வாடிக்கையாளர் மனோஜ்குமார் கூறியதாவது, '' தான் புதிய மொபைல் போன் வாங்கத் திட்டமிட்டு இருந்தேன். அப்போது, இந்த கடையில், புதிய போனுடன் 1 கிலோ தக்காளி இலவசமாக தருவதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு புதிய மொபைல் போனும், வீட்டில் உள்ளவர்களுக்கு தக்காளியும் கிடைத்துவிடும். இது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதால், இந்த கடைக்கு வந்தேன்'' என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பணவீக்கம் அதிகரித்து உள்ள நிலையில், மக்களால், தக்காளியை அதிக அளவிற்கு வாங்க இயலவில்லை. குறைந்த பட்சம் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால், கொஞ்சம் தக்காளியாவது கிடைக்கும் என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மற்றொரு வாடிக்கையாளர் ஹரிஷ் குமார் கூறியதாவது, ''காய்கறிகளின் விலை கணிசமான அளவிற்கு அதிகரித்து உள்ளதன் காரணமாக, மக்கள் தற்போது, தக்காளி இல்லாமலேயே, காய்கறிகளை வாங்கி வருகின்றனர். புதிதாக மொபைல் போன் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள், இந்த கடையில், போன் வாங்கும் பட்சத்தில், அவர்களுக்கு, ஒரு கிலோ தக்காளி, இலவசமாக கிடைக்கும்'' என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்ட ஹனுமார் கோயில், மசூதி!