சஹரன்பூர் : உத்தர பிரதேசத்தில் பீம் ஆர்மி மற்றும் அசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில், ஆதரவாளரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு, வீடு திரும்பிய போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில், தனது ஆதரவாளர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சஹரன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அரியான பதிவெண் கொண்ட காரில் வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டு உள்ளது.
நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், குண்டு கார் கண்ணாடிகளை துளைத்து உள்ளே நுழைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. உடனடியாக சுதாரித்த சந்திரசேகர் ஆசாத்தின் ஓட்டுனர் காரை யு-டர்ன் திருப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அசாத்திற்கு குண்டடி காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சந்திரசேகர் ஆசாத்தின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. காரில் பயணித்த சந்திரசேகரின் சகோதரர் உள்ளிடோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்திரசேகர் ஆசாத்தை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர ஆசாத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவனை முன் திரண்டனர். சந்திரசேகர் ஆசாத் மீதான தாக்குதல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பிறபடுத்தப்பட்ட சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சந்திரசேகர் ஆசாத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Chandrayaan-3 launch: ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3 - இஸ்ரோ!