புது டெல்லி: பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்.7 ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து 600 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அதிநவீன போர் கப்பலை அனுப்பியுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. பாலஸ்தீனின் காசா பகுதி கடந்த 2007 ம் ஆண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே பல மோதல்கள் நடந்து வந்துள்ளது.
பாலஸ்தீனியர்களின் தாக்குதல் மற்றும் அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க காசா எல்லையை மூடும் நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்தது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் இஸ்ரேலை சேர்ந்த 70 பேர் இறந்தனர். மேலும் இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் 198 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் போருக்கு தயாராகிவிட்டதாகவும், இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம் விலை கொடுக்கும் என வீடியோ செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்!
நேற்று 74 பாதுகாப்பு படை வீரர்கள் உற்பட 600 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இஸ்ரேல் மக்கள் பலரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் ஆதரவு இஸ்ரேலுக்கு கண்டிப்பாக உள்ளது என கூறி 8 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா தன் அதிநவீன விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) மற்றும் போர்விமானங்களின் தளவாடங்கள் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும். அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.
போர்டுடன் இணைந்து அமெரிக்க, கடற்படையின் யுஎஸ்எஸ் நார்மண்டி என்ற கப்பல், யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர், யுஎஸ்எஸ் ரேமேஜ், யுஎஸ்எஸ் கார்னி மற்றும் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் ஆகிய போர் கப்பல்களையும் அனுப்பியுள்ளது அமெரிக்கா. மேலும் யுஎஸ் விமானப்படை F-35, F-15, F-16 மற்றும் A-10 ஆகியவற்றையும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அவை இஸ்ரேலை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இதனால் இந்த போரானது நீண்ட காலம் நீடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பயிற்சி விமானம் விபத்து! 2 இந்தியர்கள் பலி! கனடாவில் நடந்தது என்ன?