டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சிமாநாட்டின் முதல் நாளில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மாநாட்டின் முதல் நாளில் முக்கிய அம்சமாக டெல்லி ஜி20 கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தை. ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொண்டு உள்ளன. கூட்டுப்பிரகடனத்தில் ரஷ்யா -உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் இடம்பெற்று இருந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான, மிகவும் மென்மையான கருத்துக்களே, இந்த கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்று இருந்த காரணத்தினால், ரஷ்யா, இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10ஆம் தேதி) காலை, ராஜ்காட் பகுதியில் அமைந்து உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வியட்நாம் புறப்பட்டார் பைடன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு, முதல்முறையாக, டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியா வந்து உள்ளார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய 50 நிமிட கால அளவிலான சந்திப்பில், இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக, அமெரிக்கா, தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. அதேபோல், அமெரிக்காவிடம் இருண்ட்து, இந்தியா 31 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) வாங்கும் நிகழ்வையும், ஜெட் இஞ்ஜின்கள் தயாரிப்பில், இணைந்து செயல்பட உள்ளதையும் அமெரிக்கா வரவேற்று உள்ளது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டை முடித்துவிட்டு, அமெரிக்க அதிபர் வியட்நாம் புறப்பட்டுச் சென்றார். ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்ட நிகழ்வுகளில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!