வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் குடியேறியவரின் மனைவிக்கு வேலைவாய்ப்புக்கான அங்கீகார அட்டை வழங்கக் கூடாது என தனியார் அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள் ஐடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது எச்-1 பி விசாவில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த மாற்றம் மூலம் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவரின் மனைவியும் அங்குள்ள எதாவது ஒரு துறையில் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் அதிக பலன் கண்டதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த சட்டத்தால் உள்ளூர் பெண்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், அதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பு விகிதம் குறையும் என பல்வேறு தரப்பினரால் முறையிடப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சேவ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ (Save Jobs USA) என்ற அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க அதிபராக ஓபாமா இருந்த போது கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கிற்கு அமேசான், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் Save Jobs USA வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிபதிகள், Save Jobs USA அமைப்பு எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு, நாடாளுமன்றம் அனுமதி அள்ளிக்கவில்லை என தெரிவித்து உள்ளதாகவும், அதேநேரம் தேசிய மற்றும் குடிவரவுச் சட்டத்தின் அடிப்படையில் இந்த கருத்து நேரடியாக நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு செல்வதாக கூறினர்.
H-4 விசாவில் வரும் பெண்கள் அமெரிக்காவில் தங்குவதற்கும் வேலைவாய்ப்பை பெற அனுமதிப்பதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதி கூறினார். அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் குடியேறியவர்களில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அங்கீகார அட்டை வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்து போன விவசாயிக்கு கடன் வழங்கிய வங்கி! - கடனை திருப்பிச் செலுத்த நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி!