கொல்லம்: நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நடக்கும் நீட் நுழைவுத் தேர்வு ஞாயிறு (ஜூலை17) அன்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 18.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்வு மையத்திற்குள் செல்லும் முன்பு, தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுவர். பெண் தேர்வர்கள், மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக்கொண்டு சோதனை செய்யப்படுவர்.இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். அவரை சோதனை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மெட்டல் டிடெக்டர் சோதனையின்போது அவரது உள்ளாடையை கழற்ற நிர்பந்தம் செய்துள்ளனர். கழற்றிய பிறகே தேர்வுக்கு அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாணவி பெண் அலுவலர்களின் நடவடிக்கையால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்றும் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதில் தொடர்புடைய 5 பெண் அலுவலர்களை நேற்று(ஜூலை 17) காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில் ஆயூரில் உள்ள மார்த்தோமா கல்லூரியைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள். கீது, வீணா மற்றும் ஜோத்ஸ்னா ஆகியோர் NTA ஆல் பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரிகின்றனர். அவர்கள்தான் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர்களை கைது செய்ததாக தெரிவித்தனர். கல்லூரியைச் சேர்ந்த இந்த இரண்டு ஊழியர்களும் மாணவர்களை மோசமாக நடத்தியதாக மாணவிகள் கூறியுள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் கல்லூரிக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடத்துவதற்கான அடிப்படை வசதிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாணவிகளிடம் சோதனை நடத்திய கல்லூரி ஊழியர்கள் உடை பெரீதா அல்லது பரீட்சை பெரிதா என கேட்டதாக மாணவிகள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். நீட் தேர்வு சர்ச்சையில் உள்ளாடைகளை கழற்றிய விவகாரத்தில் மேலும் பல கைதுகள் நடைபெறலாம் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கேரளாவில் உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு