உத்தரப்பிரதேசம் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளியின் உடலை இருவர் பாலத்திலிருந்து, ரப்தி ஆற்றில் வீசும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் தூக்கி எறியப்பட்டது பிரேம்நாத் மிஸ்ரா என்ற நபரின் உடல் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மே 25ஆம் தேதி பிரேம்நாத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இதன்பின்னர் இறந்தவரின் உடல் கரோனா நெறிமுறைகளின்படி அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை பிபிஇ உடை அணிந்த அவரது உறவினர்கள் இருவர், ரப்தி ஆற்றில் வீசினர். அப்போது சிலரால் எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி, அவர்களைக் கைது செய்தனர்.
பிகார், உத்தரப்பிரதேசத்தில் கரோனா நோயாளிகளின் உடல்களை உறவினர்கள் ஆற்றில் தூக்கிவீசி எறியும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பிபிஇ கிட்களை துவைத்த தொழிலாளர்கள் - அதிர்ச்சி வீடியோ