மதுரா : இந்தியாவின் வருங்காலத்தை உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 2022 நிர்ணயிக்கும் என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதிர்க்கட்சிகள் வென்றால் மாநிலம் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் பின்தங்கிவிடும்” என்றும் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, “அகிலேஷ் அல்லது மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் பின்தங்கிவிடும், மாநிலத்தில் காட்டாட்சி நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து, “வாக்காள பெருமக்களே. நான் உங்களிடம் வலியுறுத்தி ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும், யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக வர வேண்டும். ஏனெனில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும்” என்றார்.
மேலும், “தற்போதைய பாஜக அரசையும், கடந்த கால சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் அரசையும் ஒப்பிட்டு பாருங்கள். சமாஜ்வாதி கட்சி ஒரு சாதிக்காக ஆட்சி செய்தது, மற்றொரு பக்கம் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்றது” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், “கடந்த காலங்களில் யாரும் உத்தரப் பிரதேசத்தை கண்டுக்கொள்ளவில்லை. நரேந்திர மோடி பிரதமராகவும், யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரே மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன” என்றார்.
பின்னர் மதுரா விருந்தாவன் நகரில் உள்ள பங்கே பிஹாரி கோயிலில் வழிபாடு நடத்திய அமித் ஷா, மதுரா மற்றும் கௌதம புத்தர் நகரில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு பிப்.10ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க : Goa Polls: 22 தொகுதிகளை வென்று மீண்டு(ம்) வருவோம்- பிரமோத் சாவந்த்!