பிரயக்ராஜ்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண் புய்யன் என்பவர், கடந்த 20ஆம் தேதி தனது சகோதரருடன் தாதரில் இருந்து மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார். ரயில் உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ண குமார், அலோக் ஆகிய இரண்டு ரயில்வே காவலர்கள் அருண் புய்யனிடம் டிக்கெட்டை சோதனை செய்ததாகத் தெரிகிறது.
அப்போது காவலர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காவலர்கள் இருவரும் அருணை ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இதில் அருண் புய்யன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அருண் புய்யன் மரணத்திற்குக் காரணமான ரயில்வே காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம், எஸ்சி-எஸ்டி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் வாரணாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஓட்டுநர் கைது