சம்பல்: உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் திருமண விழாவில், மணமக்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மணமகன் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். மணமகள் தடுத்த போதும், வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மணப்பெண், பெரியவர்கள் கூடியிருக்கும் அவையில் இதுபோல அநாகரீகமாக நடந்து கொள்ளக் கூடாது என மணமகனை கடிந்து கொண்டார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு வீட்டாரும் காவல்நிலையத்துக்கு சென்றனர்.
போலீசார் மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். முடிவை மறுபரிசீலனை செய்யும்படி மணமகன் தரப்பு கெஞ்சியது. ஆனால், மணமகள் பிடிவாதமாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், மணமகள் இந்த திருமணத்தை செய்து கொள்ள விரும்பவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!