லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலுக்கு ஆளும் பாஜக அரசு இதுவரை மூன்று எம்எல்ஏக்களை பறிகொடுத்துள்ளது. இன்று(ஏப்.29) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நொய்டாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 64 வயதான நவாப்கஞ்ச் எம்எல்ஏ கேசர் சிங் கங்வார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டுவரை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்த இவர் , கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கட்சி நடவடிக்கைக்கு உள்ளானார். இதையடுத்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அப்போது நடைபெற்ற 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் நவாப்கஞ்ச் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மைத்துனர் உஷா கங்வார் பரேலி பகுதியின் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார்.
முன்னதாக, லக்னோ (மேற்கு) தொகுதி எம்எல்ஏ சுரேஷ் ஸ்ரீவஸ்தவா, அவுரையா எம்எல்ஏ ரமேஷ் சந்திர திவாகர் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் இரண்டு அமைச்சர்கள், சேதன் சவுகான் மற்றும் கமல் ராணி வருண் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.