இந்திய அரசியலமைப்பின்படி, தீண்டாமை நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஜனவரி 29ஆம் தேதியன்று தீண்டாமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இன்னும் பல இடங்களில் தீண்டாமை நடைமுறை இருக்கத்தான் செய்கிறது.
அந்த வரிசையில், கர்நாடகாவின் தேவநஹள்ளியில் பன்னிமங்கலா கிராமத்தில் நாடோடி சமூகத்தை(nomad community )சேர்ந்த 5 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களால் கிராமத்தில் கடைகளுக்கு செல்ல முடியாது, மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாது, கிராமத்தில் சாதாரணமாக நடக்கக்கூட முடியாது. அவர்கள் கிராமத்திற்குள் வருவதைப் பார்த்தாலே கிராமவாசிகளால் விரட்டப்படுஜ்கின்றன. எதிர்த்துக் கேட்டால், அவர்கள் தாக்குவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த 5 குடும்பங்களும் அந்தக் கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களின் சமூகத்தைச் சுட்டுக்காட்டிய கிராமவாசிகள், கிராமத்தைவிட்டு வெளியே விரட்டினர். தற்போது கிராமத்திற்கு வெளியே குடிசையில் தங்கியபடி கூலி வேலை செய்து வருகின்றனர்.
கிழிந்த பிளாஸ்டிக், பேனர், தேங்காய் இலை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட குடிசைகளில் தான் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வசித்து வருகின்றனர். மின் இணைப்பு வசதியும் அவர்களுக்கு கிடையாது. ஆனால், அவர்களை அங்கிருந்தும் விரட்ட அரசு அலுவலர்கள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தக் குடும்பங்களுக்கு ஆதார் அட்டை, வாக்குப் பட்டியலில் பெயர், ரேஷன் கார்டு என எல்லாம் இருந்தும், கடந்த 20 ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவிக்கின்றனர்.குடிநீர் எடுப்பதற்குக் கூட, கிராமத்திற்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. எப்படியாவது, மீண்டும் கிராமத்தில் வசிப்பதற்காகப் போராடி வருகின்றனர். அவர்களின் முயற்சி இன்னமும் கனவாகத்தான் உள்ளது.
இதையும் படிங்க: திமுக, பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை!