இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை, மொத்தமாக 22 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 693 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடமிருந்து ஆகஸ்ட் - டிசம்பர் காலகட்டத்தில் கரோனா தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, அந்நிறுவனத்திற்கு 1500 கோடி ரூபாய் முன்பணமாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் செலுத்தியுள்ளது.
பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி மூன்றாம்கட்ட பரிசோதனையில் உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனையில் மருந்திற்கு நல்ல எதிர்ப்புச் சக்தி உருவானதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடுப்பூசி ஓரிரு மாதங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னரே, முன்பதிவு செய்து நிதியுதவி அளிப்பது, உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் செயல் எனப் பாராட்டிவருகின்றனர்.
இந்தியாவில் ஆகஸ்ட் - டிசம்பர் காலகட்டத்தில் பல நிறுவனங்களைச் சேர்ந்த 216 கோடி டோஸ்கள் தயார்நிலையில் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.