டெல்லி: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பஞ்சாப்பிலுள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் விவசாயிகளுடன் வேளாண் சட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள்
அப்போது பேசிய அமைச்சர், "பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாப் உடன்பிறப்புகளே, உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் முயற்சியில் பாஜக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு ஆதரவாக குவாலியரில் இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒண்றிணையவுள்ளனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
விவசாயிகள் அரசிற்கு எதிராக நின்றபோதும், அவர்களின் நலனிற்காக பிரதமர் நரேந்திர மோடி, சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தது. பல்வேறு வேளாண் பொருள்களுக்கான செலவுகளுக்காக 50 விழுக்காடு லாபத்தை இணைத்துள்ளது. சுவாமிநாதன் ஆணையம் இந்த நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிகளுக்கு பரிந்துரைத்தது. ஆனால் இதனை செயல்படுத்தியது பாஜக அரசுதான்.
ஆதரவுக்கு நன்றி
விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டபோதிலும், சிலர் மத்திய அரசிற்கு ஆதரவாக கூடி அச்சட்டங்கள் குறித்து விவரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி" என்றார்.
ஆதரவளித்த விவசாய சங்கங்கள்
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில், அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்புக் குழுவுடன் தொடர்புடைய உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பிகார் மற்றும் ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்து அமைப்புகள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டிசம்பர் 14ஆம் தேதி சந்தித்து மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு தங்களது ஆதரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர் போராட்டங்கள்: வேளாண் சட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழ்நாட்டு விவசாயிகள்!