உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்குக் கீழ் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 12ஆம் தேதி காலை 9 மணியளவில் சுமார் 35 மீட்டர் நீளத்திற்குச் சுரங்கத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தன. உள்ளே கிட்டத்தட்ட 40 தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 7 நாட்கள் ஆகியும் தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அதிநவீன துளையிடும் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாகக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீட்புப் பணிகளை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன் உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்துவும் வருகைதந்தார்.
தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் தாமி கூறியபோது, "கிடைக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளிலும் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக அனைத்து வகையான நிபுணர் குழுக்களும் இங்கு பணியாற்றி வருகின்றன. மேலும், அனைவரின் உயிரையும் காப்பதே எங்களின் முதல் பணி. இதற்காக, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது" என்று கூறினார்
நேற்று (நவ 18) பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் மங்கேஷ் கில்டியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சில்க்யாரா சுரங்கப்பாதையில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளின் நிலைமையை ஆய்வு செய்தார்.
ஏழு நாட்களாகச் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மரம் வெட்டும் நிபுணர்களை வனத்துறையினரால் சுரங்கப்பாதை இடத்திற்கு வரவழைக்கப்பட்ட உள்ளதாகவும் சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்து துளையிட்டு அதன் மூலம் தொழிலாளர்களை அடைய முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்குச் சுரங்கப்பாதைக்கு மேலே ஒரு இடம் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொழிலாளர்கள் உள்ள இடத்திற்குச் சென்றடையத் தோராயமாக 300-ல் இருந்து 350 அடி ஆழம் துளையிட்டு மீட்புக்கான முயற்சி தொடங்கப்பட உள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: India Vs Australia : உலக கோப்பை யாருக்கு? இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்!