புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 24ஆம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ளார் . இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என். ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரிடையாக சந்திக்காமல் டெல்லிக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.
இதற்கிடையில் பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டு முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் அதற்குச் செவி சாய்க்காமல் இருந்து வருகிறார் முதலமைச்சர் என். ரங்கசாமி.
இதனிடையே தலைமை செயலருக்கு அனுப்பும் சில முக்கிய கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக முதலமைச்சர் அலுவலக தரப்பில் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனால், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின் குமாரை மாற்றக்கோரி முதலமைச்சர் தரப்பில் கடந்த 8 மாதங்களாக மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனைக் கண்டு கொள்ளாமல் மத்திய அரசும் தலைமை செயலர் மூலம் முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கவர்னர் தமிழிசை கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு இம்மாதம் 24ஆம் தேதி வரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அமித் ஷா, புதுச்சேரிக்கு வருகை தருவதை யொட்டி ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. பாஜக, என்ஆர் காங்கிரஸ் இடையே நடைபெற்று வரும் இந்தப் பனிப்போர் அமித்ஷா வருகையால் சமரசம் செய்யப்படும் எனவும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!