நாடு முழுவதும் 60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் ராணுவ மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ராணுவ மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் தொடங்கும். இதற்கான வழிகாட்டு நடைமுறைகள் அடுத்த ஒரு சில நாள்களில் வெளியிடப்படும்" என பதிவிடப்பட்டுள்ளது.
கோவின் 2.0 என்ற இணையதளத்திலும் ஆரோக்கிய சேது போன்ற செயலிகளிலும் மக்கள் கரோனா தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துகொள்ளலாம்.