டெல்லி: டெல்லியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் சூதாட்டங்கள் உள்ளிட்டவை மீதான வரிவிதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி, ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோக்கள், குதிரைப் பந்தயம் ஆகியவற்றிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று(ஆகஸ்ட் 2) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரிவிதிப்பு முடிவுகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோக்கள், குதிரைப் பந்தயம் ஆகியவற்றிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி: நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசுகள் குற்றம் சாட்டின. இதனால், மாநில அரசுகளின் இழப்புகளை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அந்த இழப்பீட்டுத் தொகையும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என மாநில அரசுகள் விமர்சித்தன. இதனிடையே அறிவிக்கப்பட்டபடி, ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு முடிவடைந்துவிட்டது. அதன் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இதனிடையே ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இதையும் படிங்க: "எம்.பிக்கள் கண்ணியமாக நடக்கும் வரை மக்களவைக்கு வரப்போவதில்லை" - ஓம் பிர்லா தகவல்!