டெல்லி: நடப்பாண்டிற்கான காரீஃப் பருவச் சந்தைப்படுத்தல் மூலம் உழவர்களிடமிருந்து 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நடுவண் அரசு நேற்று (டிச. 01) தெரிவித்துள்ளது. மேலும் இது கடந்தை ஆண்டைக் காட்டிலும் 18.58 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மொத்த நெல் கொள்முதலில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 63.76 விழுக்காடு என 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்செய்யப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் அமைச்சகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், “2020-21ஆம் ஆண்டு காரீஃப் பருவச் சந்தைப்படுத்துதல் மூலம் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட், தமிழ்நாடு, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், கேரளா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த நவ. 30ஆம் தேதிவரை சுமார் 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 268.15 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்செய்யப்பட்ட நிலையில், இது 18.58 விழுக்காடு அதிகமாகும். மொத்த 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலில் பஞ்சாப் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் வழங்கியுள்ளது. இது மொத்த கொள்முதலில் 63.76 விழுக்காடு ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காரீஃப் சந்தைப்படுத்துதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளால் ஏற்கனவே 29.70 லட்சம் உழவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் ரூ.60, 038.68 கோடி பயனடைந்துள்ளனர் என அந்தச் செய்திகுறிப்பு கூறுகிறது.
நடுவண் அரசிடம் மாநிலங்கள் கோரிக்கைவிடுத்ததன் அடிப்படையில், 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை காரீஃப் பருவச் சந்தைப்படுத்துல் மூலம் கொள்முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேம், ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும். மேலும், 1.23 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதலுக்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், தேங்காய் ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்வதற்கான திட்டங்கள் கிடைத்ததும் ஒப்புதல் வழங்கப்படும்.
நடுவண் அரசு கடந்த நவம்பர் 30ஆம் தேதிவரை நோடல் ஏஜென்சீஸ் மூலம் 1,04,546.68 மெட்ரிக் டன் பருப்பு வகைகள், உளுந்து, நிலக்கடலை, சோயாபீன் ஆகியவை குறைந்தபட்ச ஆதார விலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தானில் 60 ஆயிரத்து 107 உழவர்கள் ரூ.563.34 கோடி பயடைந்துள்ளனர்.
இதேபோல், நவம்பர் 30ஆம் தேதிவரை ஐந்தாயிரத்து 89 மெட்ரிக் டன் தேங்காய்களை குறைந்தபட்ச ஆதார விலையில் 52.40 கோடி ரூபாய் மூன்றாயிரத்து 961 உழுவர்கள் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பயடைந்துள்ளனர்.
மேலும், இந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதிவரை 29 லட்சத்து ஒன்பதாயிரத்து 242 பருத்தி பேல்கள் கொள்முதல்செய்யப்பட்டதில், ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 449 உழவர்கள் சுமார் ரூ.8,515.53 கோடி ரூபாய் பயனடைந்துள்ளனர்.