டெல்லி: இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் 2023 - 2024ஐ பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும். அதேபோல் வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், இது பிரதமர் மோடி தலைமையிலான இறுதி முழு பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்காக காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவரை மத்திய நிதியமைச்சர் உள்பட அரசு உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர், தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஏனென்றால் உலக பொருளாதாரத்தில் மிளிரும் நட்சத்திரமாக இந்தியா உள்ளது.
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதத்தை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக அளவிலான நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன. ஜி 20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது, நாட்டின் தனித்தன்மையை நிரூபித்துள்ளது.
உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், இளைஞர் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக உள்ளது. 11.4 கோடி விவசாயிகளுக்கு கிஷான் உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கல் மீதான உரை முடிவடைந்த பிறகு, Union Budget என்ற மொபைல் செயலியின் மூலம் பயனர்கள் பட்ஜெட் குறித்த முழு விவரங்களை அறியலாம். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டி? - ஆனந்த் மஹிந்திரா ருசிகரம்