மும்பை: ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று(அக்.19) இந்தியா வந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவரை மகாராஷ்டிரா மாநில அரசின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து முதல் நாளான இன்று, மும்பை தாஜ் நட்சத்திர ஹோட்டலில், 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மும்பை தாக்குதல் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள படங்களைப் பார்வையிட்ட பின்னர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து குஜராத் சென்ற அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.
கெவாடியாவில் நடக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடியுடன் கலந்து கொள்ள இருக்கிறார். பின்னர் அங்குள்ள படேல் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்றும், மொதேராவில் உள்ள நாட்டின் முதல் சோலார் கிராமம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "காங்கிரஸில் எனது பணி என்னவென்று புதிய தலைவர் தான் தீர்மானிப்பார்" - ராகுல் காந்தி!