திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஏகே அந்தோணி திருவனந்தபுரத்தில் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஒருமித்த பகருத்துடன் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும். இதனை நான் உறுதியாக சொல்கிறேன்” என்றார்.
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகிவருகின்றன. கட்சியின் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக மாநில சட்டசபையில் முன்னிலை வகித்த போதிலும், முதலமைச்சர் முகமாக சாண்டியை காட்டியபோது யூகங்கள் அதிகரித்தன.
எனினும் இந்த யூகங்களை கட்சித் தலைமை ஒதுக்கி வைத்துள்ளது. தற்போது தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே குறிக்கோள் என்றும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஏகே அந்தோணி தொடர்ந்து கூறுகையில், பினராயி விஜயன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையாக அமர்வது நல்லது, அவரின் கடந்த கால ஆட்சி குறித்து விசாரிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த முறை நேமம் தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளர் ஓ. ராஜகோபாலுக்கு பதிலாக இம்முறை முரளிதரன் நேமம் தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு!