மும்பை : சிவசேனா கட்சியின் 57வது நிறுவன நாளை கொண்டாடப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் தங்களுக்குள் வார்த்தைப் போர் நடத்திக் கொண்டது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சியை 1966 ஆம் ஆண்டு பால் தாக்ரே தொடங்கினார். இந்நிலையில், அந்த கட்சியின் 57வது நிறுவன நாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. சிவசேனா மற்றும் சிவசேனா உத்தவ் அணி ஆகிய இரண்டு அணிகளாக கட்சி பிரிந்த நிலையில், இரண்டாவது ஆண்டாக சிவசேனாவின் நிறுவன நாள் தனித்தனியாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மீதான அதிருப்தியில் ஒன்று திரண்ட எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணியாக சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியே உண்மையான சிவசேனா கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேநேரம் தங்கள் தரப்பே உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்ரே தலைமையிலான அணி கூறி வருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் 57வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. கட்சி நிறுவன நாளை முன்னிட்டு இரு பிரிவினர் இடையே போஸ்டர் ஒட்டுவது மற்றும் பேனர் வைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் கடுமையாக நடைபெற்றன.
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அணியினர் சார்பில் கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் சிவசேனா நிறுவன நாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உரையாற்றினார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா சார்பில் சயானில் சண்முகானந்தா அரங்கில் கட்சி நிறுவன நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நிறுவன நாளை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், முக்கிய நகரங்களை போலீசார் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமாதான முயற்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஈடுபட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்ரே, தனது அரசியல் குரு அனந்த் திக்கி, சத்திரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.
அதேநேரம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு போட்டியாக உத்தவ் தாக்ரே அணியினர், சிவசேனா கட்சியின் நிறுவனர் மறைந்த பால் தாக்ரே, அவரது மகன் உத்தவ் தாக்ரே மற்றும் பேரன் ஆதித்ய தாக்ரே ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டினர். அதேநேரம் உத்தவ் தாக்ரே அணியில் இருந்த எம்.எல்.சி மணிஷா கயாண்டே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியது அவர்களுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.
கட்சி விவகாரங்கள் குறித்த கருத்துகளை பேசுவதற்கு கட்சியின் மேலிடத்தை அணுக முடியாத சூழல் உத்தவ் தாக்ரே அணியில் நிலவுவதாகவும், பெண்களிடம் கட்சிக்காரர்கள் பணம் கேட்பதாகவும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா அணியில் இருந்து விலகிய எம்.எல்.சி கயாண்டே குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க : Indigo : 500 விமானங்கள் ஆர்டர்... இண்டிகோ கொடுத்த ஷாக்!