நாஷிக்: மகாராஷ்டிராவின் நாஷிக் நகரில் பிம்பால்கான் பகுதியில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. அங்கு நண்பகல் பொழுதில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய ஒருவர் தயாராக இருந்துள்ளார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர், சத்தமில்லாமல் வந்து தங்களது வாகனத்தை நிறுத்தி, ஆற்றுப் பாலத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பவரை கவனித்துள்ளார்.
இளைஞர் பார்ப்பதைக் கவனித்த அந்த நபர் உடனடியாக, ஆற்றில் குதிக்க முற்பட்டார். அப்போது அவர் தக்க சமயத்தில் அந்த நபரின் கையைப் பிடித்துவிட்டு, உதவிக்கு மற்றவரையும் அழைத்தார். பின்னர் அருகில் இருந்தவரும் சேர்ந்து பாலத்தில் விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த நபரை, இழுத்து பாலத்தின் மேல், கொண்டுவந்தனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொலி, நேற்று முன்தினம் (மார்ச் 16) எடுக்கப்பட்டுள்ளது. அதில் தற்கொலைக்கு முயன்ற பிம்பால்கான் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் அஹிரா (27) குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும்; அவரை காப்பாற்றிய இரு இளைஞர்கள் அஜய் யாதவ், நாஜிம் அட்டார் ஆகியோர் என்றும் தகவல் உறுதியாகி உள்ளது.
மன உளைச்சல் காரணமாக தற்கொலையின் விளிம்புவரை சென்ற ஒருவரைக் காப்பாற்றிய இளைஞர்களின் செயலைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிம்பால்கான் காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பஞ்சர் கடை நடத்தும் பாஜக எம்எல்ஏவின் மகன்கள்!