சூரத்: வெறிநாய்கள் குழந்தைகளை கடித்து குதறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. ஹைதராபாத்தில் கடந்த 19ம் தேதி, 4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்தான். இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள தொழிலாளர் காலனியில் வசிக்கும் ரவியும், அவரது மனைவியும் கடந்த 19-ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். தம்பதியின் 2 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை சூழ்ந்த 4 வெறிநாய்கள் கொடூரமாக கடித்து குதறின. இதில் தலை, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை அங்குள்ள அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் கேதன் நாயக் கூறுகையில், "நாய்கள் கடித்ததில் குழந்தைக்கு 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. அறுவை சிகிச்சை செய்து உரிய முறையில் சிகிச்சை அளித்தோம். எனினும் குழந்தை இறந்துவிட்டது. தினமும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு 50 பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர்" என்றார்.
சூரத் நகரின் மேயர் ஹீமாலிபென் கூறுகையில், "மாநகராட்சி சார்பில் தனியார் மருத்துவமனை மூலம் தினமும் 30 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி - பாஜக கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளு - கலவர பூமியாக மாறிய மாநகராட்சி கூட்டம்!