கேரளா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகமாகப் பதிவாகிவருகிறது. நாட்டிலேயே தொற்று அதிகமுள்ள மாநிலமாக கேரளா மாறியுள்ளது. பக்ரீத், ஓணம் ஆகிய பண்டிகைகள் காரணமாகக் கொடுக்கப்பட்ட தளர்வுகளால் மாநிலத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதாகக் கூறப்படுகிறது.
தினசரியாக சுமார் 17 ஆயிரமாகத் தொற்று பதிவாகிவந்த நிலையில், தற்போது 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முடிவுசெய்தது.
அதன்படி கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதிமுதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது, இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்பு பரவும் மாநிலமாக கேரளா உள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதால், மீண்டும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.