இமாச்சலப்பிரதேசம்: மணாலி - லே வழித்தடத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த லாஹவுல் ஸ்பிட்டி போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அதில் உயிரிழந்தவர்கள் ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா (32) மற்றும் ஜம்முவில் உள்ள சரிகா விஹார் லோயர் ரூப் நகரைச் சேர்ந்த கபாலா சிங் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆதித்யா நேற்றைய முன்தினம் (ஜூன் 21) சர்ச்சு பகுதிக்கு அருகிலுள்ள பாங்கில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல், கபாலா நேற்று (ஜூன் 22) ஜிங்ஜிங்பார் பகுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். போலீசார் அவர்கள் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கீலாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இருவரும் நடக்கும்போது திடீரென மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாக உடன் பயணித்தவர்கள் தெரிவித்ததாக லாஹவுல் ஸ்பிட்டி (Lahaul-Spiti) போலீசார் தெரிவித்தனர். மேலும், மணாலி-லே வழித்தடத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கத் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவக் கருவிகளை எடுத்துச் செல்லுமாறு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தவிர, சுற்றுலாப் பயணிகள் தங்களை நீரேற்றமாக வைத்திருக்க குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். லாஹவுல் ஸ்பிட்டி மாவட்டம் மிக உயரத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட இப்பகுதி ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
மணாலி-லே தேசிய நெடுஞ்சாலை லாஹவுல் ஸ்பிட்டி வழியாகச் செல்லும் நாட்டின் மிக உயரமான நெடுஞ்சாலையாகும். மணாலி மற்றும் லே இடையே 15 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பல பனிக் கணவாய்கள் உள்ளன. இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லாஹவுல் ஸ்பிட்டி எஸ்பி மயங்க் சவுத்ரி கூறுகையில், “சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் சுவாசப் பிரச்னை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்ல வேண்டும்.
லாஹவுல் ஸ்பிட்டி மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், பல பகுதிகளில் ஆக்ஸிஜன் அளவு எதிர்பாராத விதமாகக் குறையக்கூடும். இது போன்ற சூழ்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படும் பட்சத்தில் சரியான சிகிச்சை இல்லாத நேரத்தில் உடல் நிலை மோசமடையக் கூடும். இதற்கு முன்பும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து உள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் நெட்வொர்க் இல்லாததால், ஆபத்தான காலங்களில் தகவல் தெரிவிப்பதும், உதவி பெறுவதும் சிரமமாக உள்ளது. இதனால் சுவாசக் கோளாறு உள்ள சுற்றுலாப் பயணிகள் மணாலி-லே சாலை மற்றும் மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் அமைந்துள்ள தர்ச்சாவைத் தாண்டி பயணிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் முறையில் பெருகும் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீடிக்கும் சிக்கல்!