கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மார்கிராமில் நேற்றிரவு (பிப்.4) திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த நியூட்டன் ஷேக், லால்து ஷேக் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மர்மநபர்கள் அவர்கள் மீது கை எறி குண்டுகளை வீசி தாக்கியதாக தெரிகிறது.
இந்த குண்டு வெடிப்பில் நியூட்டன் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். லால்து ஷேக் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த லால்து ஷேக் இன்று உயிரிழந்துவிட்டார்.
லால்து ஷேக், உள்ளூர் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரசின் உட்கட்சிப்பூசல்தான் காரணம் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் பிர்பூம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த நடவடிக்கைக்கும் கொலை சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும், இது முழுக்க நிர்வாக ரீதியான நடவடிக்கை என்றும் திரிணாமுல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு