நீலகிரி: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக நீலகிரி மாவட்டம் உதகை விளங்குகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவை எல்லைகளாகக் கொண்ட இங்கு கஞ்சா புழக்கம் அதிகம் காணப்படுகிறது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு 4.0 ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையின் ஒரு பகுதியாக, கோத்தகிரி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்யும் கன்ஜன் குமார் என்பவர் பிடிபட்டார். இந்த கன்ஜன் குமார் இரயில் மூலம் போதைப்பொருட்களைக் கடத்தி வந்து அதை எடை போட்டு, சிறு பொட்டலங்களாக மாற்றி பங்கஜ் குமார் மூலம் விற்பனை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரையும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையிலான காவல் துறையினர் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான, 3 கிலோ 300 கிராம் கஞ்சா, புகையிலை, பாங்கு உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலம் மற்றும் பாங்கு போதைப் பொருட்கள் மற்றும் செல் போன் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: "நீதிமன்றம் உத்தரவிட்டும் மவுனம் காக்கும் அரசு" உண்ணாவிரத போராட்டம் அறிவித்த செவிலியர்கள்!