ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (42), ஷியாம்பிரசாத் (31) ஆகியோர் கடந்த ஜூலை 5ஆம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் பெங்களூரு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.
கார் வனப்பகுதி வழியாக சென்றபோது, ஆசனூர் அருகே நெடுஞ்சாலை ஓரம் காட்டு யானை நிற்பதைப் பார்த்து உள்ளனர். உடனே இருவரும், காரை நிறுத்திவிட்டு யானைக்கு அருகில் சென்று செல்பி எடுத்து உள்ளனர். காட்டு யானையை ஏராளமான வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வேடிக்கை பார்த்த நிலையில், இவர்கள் இருவர் மட்டும் யானைக்கு மிகவும் அருகில் சென்று செல்பி எடுத்தனர். அப்போது யானை அவர்களை விரட்ட ஆரம்பித்து உள்ளது.
இதனால் திலீப்குமார் ஓடிக் கொண்டே யானையை வீடியோ எடுத்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அவர்களிடம் சென்றபோது, இருவரும் காரில் ஏறி வேகமாகச் சென்று விட்டனர். இதையடுத்து வனத்துறையினர், பண்ணாரி சோதனைச் சாவடிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி, பண்ணாரி சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் காரை நிறுத்தி, திலீப்குமார், ஷியாம்பிரசாத் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வனப்பகுதி வழியாக செல்லும்போது வனவிலங்குகளிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பாண்டிராஜன் கூறும்போது, "தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வன விலங்குகள் நடமாடுகின்றன. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் வேடிக்கை என்று நினைத்து காட்டு விலங்குகள் உடன் செல்பி எடுக்கிறார்கள். வன விலங்குகளை தொந்தரவு செய்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளை மக்கள் தவிர்க்க வேண்டும்" என கூறினார்.
வன விலங்குகளுடன் செல்பி எடுக்க முயற்சி செய்யும்போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன. கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் யானை மிதித்து உயிரிழந்தார். அதேபோல், கடந்த மாதம் ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒற்றைக்காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை யானை துரத்திச் சென்று தாக்க முயன்றது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த நபர் உயிர் தப்பினார். அவர் யானையிடமிருந்து தப்பித்து காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையும் படிங்க: வீட்டில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!