கடந்த திங்கள்கிழமை (நவ. 23) அபுதாபியிலிருந்து டெல்லி வந்த விமானத்தின் பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனைசெய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியின் உடைமைகளைச் சோதனைசெய்ததில், 1.48 கிலோ மதிப்பிலான தங்கத்தைப் பசையாக உருக்கி இரண்டு உறைகளில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனைப் பறிமுதல்செய்த ஊழியர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில், விமானத்தின் கழிவறையில் மறைத்துவைத்திருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு ஏர் இந்தியா சாட்ஸ் ஊழியர்கள் இருவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா சாட்ஸ் (AISATS) அமைப்பு என்பது ஏர் இந்தியா (AI) மற்றும் சிங்கப்பூர் விமான நிலைய முனைய சேவைகள் (SATS) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டமைப்பாகும்.
இதையடுத்து, இரண்டு ஏர் இந்தியா சாட்ஸ் ஊழியர்கள் உள்பட மூவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கைதுசெய்யப்பட்டுள்ள பயணி தனது முந்தைய மூன்று வருகைகளின்போது ரூ.2.17 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.