டெல்லி: கிழக்கு டெல்லியில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜூடோ விளையாட்டு வீரர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். டெல்லி கிழக்குப் பகுதியில் உள்ள பிரித் விஹார் பகுதியைச் சேர்ந்தவர், மகேந்திர அகர்வால். இவரும் தேசிய ஜூடோ வீரர் இந்திர வர்தன் குமாரும் இணைந்து உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளனர்.
உடற் பயிற்சிக்கூடம் அமைக்க இந்திர வர்தன் ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்ட மகேந்திர அகர்வால் திருப்பித் தராமலும், லாபத்தில் உரிய பங்கை செலுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தட்டிக்கேட்ட இந்திர வர்தனை கடத்தல் வழக்கில் மகேந்திர அகர்வால் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த இந்திர வர்தன், சிறையில் இருந்து வெளியே வந்த கையோடு நண்பர்கள் இருவரை கூட்டு சேர்த்து, உடற்பயிற்சி கூட உரிமையாளர் மகேந்திர அகர்வாலை சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும் வெளிமாநிலங்களில் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் இந்திரவர்தன் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். இருவரும் நேபாளத்திற்கு தப்பிச்செல்ல இருந்த நிலையில், மடக்கிப் பிடித்ததாக போலீசார் கூறினர். அதேநேரம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள விஜய் என்பவரைத் தேடி வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: காதலிக்காக ஆணாக மாறிய பெண்.. அதே காதலியால் கைவிடப்பட்ட பரிதாபம்!