வாஷிங்டன் : ட்விட்டரில் 10 ஆயிரம் எழுத்துகளை கொண்ட நீண்ட பதிவுகளை வெளியிடும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.
முன் அறவிப்பின்றி ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக்கெட் சந்தா உள்ளிட்ட எலான் மஸ்க் கையில் எடுத்த அனைத்து விவகாரங்களும் சர்ச்சையில் முடிந்தன. ட்விட்டர் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கிற்கு சந்தா செலுத்தாவிட்டால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அந்த வசதி துண்டிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
இருப்பினும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னரும் பலர் அந்த வசதியை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் சந்தா செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் வசதி துண்டிக்கப்படும் என தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, 10 ஆயிரம் எழுத்துகளை கொண்டு நீண்ட பதிவுகளை ட்விட்டர் கணக்குகளில் வெளியிடும் வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆயிரம் எழுத்துகளில் ட்வீட் செய்யும் வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் போட்டியான சப்ஸ்டெக் என்ற சமூக ஊடக நிறுவனத்துடனான நீண்ட போராட்டத்தை தொடர்ந்து இந்த புதிய வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்விட்டர் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை போல் ட்விட்டரிலும் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட பிரபலுங்களுக்கு அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் பணம் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. அதற்கு செய்ய வேண்டிய அம்சங்களையும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிவு - 21 வயது இளைஞர் கைது!